ஒழுகும் பள்ளி மேற்கூரை: மாணவர்கள் அவதி
வந்தவாசி, அக். 2: வந்தவாசியில் பள்ளி கட்டட மேற்கூரையை தாங்கும் தூண்கள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. மேலும் மழைநீர் வகுப்பறைக்குள் ஒழுகுவதால் மாணவர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். வந்தவாசி நகரில் மீராகா
வந்தவாசி, அக். 2: வந்தவாசியில் பள்ளி கட்டட மேற்கூரையை தாங்கும் தூண்கள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. மேலும் மழைநீர் வகுப்பறைக்குள் ஒழுகுவதால் மாணவர்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
வந்தவாசி நகரில் மீராகாதர்ஷா தெருவில் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய வடக்கு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 38 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இப்பள்ளி கட்டட மேற்கூரையை தாங்கும் 2 தூண்கள் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும் மழைக்காலத்தில் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வகுப்பறைக்குள் வைக்கப்பட்டுள்ள கல்வி உபகரணங்களும் நனைந்து சேதமடைகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக வந்தவாசியில் பெய்த மழையின் காரணமாக வகுப்பறைக்குள் மீண்டும் மழைநீர் ஒழுகியது. இதனால் வெளிப்புற தாழ்வார பகுதியில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பள்ளிக்கென சமையலறை இல்லாததால் பள்ளி தாழ்வாரத்திலேயே சத்துணவும் தயார் செய்யப்படுகிறது. அடுப்பிலிருந்து வெளியேறும் புகையினால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.
எனவே இப்பள்ளி கட்டடத்தை உடனடியாக சீரமைக்கவும், தனி சமையலறை கட்டித்தரவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.