முகப்பு
வேலூர்

கிராமப்புறப் பள்ளிகளில் பொதுத்தேர்வு மையங்கள் அதிகரிக்கப்படுமா?

அரக்கோணம், செப் 11: கிராமங்களில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத்தேர்வு மையங்கள் இல்லாததால், மாணவர்கள் சுமார் 10 கி.மீ.க்கும் மேல் தூரத்தில் உள்ள மையங்களில் தேர்வு எழுத செல்லும் நிலையுள்ளது.

Updated On : 28 டிசம்பர், 2023 at 3:50 PM
பகிர்:

அரக்கோணம், செப் 11: கிராமங்களில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத்தேர்வு மையங்கள் இல்லாததால், மாணவர்கள் சுமார் 10 கி.மீ.க்கும் மேல் தூரத்தில் உள்ள மையங்களில் தேர்வு எழுத செல்லும் நிலையுள்ளது.

இதனால், மனஉளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள் நலனுக்காக கிராமப் பள்ளிகளிலும் தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கிராமப் பகுதிகளில் உள்ள 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டுள்ளது.

இவற்றில் அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், இப்பள்ளிகளில் இக்கல்வியாண்டிலே மாணவர் சேர்க்கைக்கும் தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இப்போது இப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பிரச்னை தேர்வு மையம்தான். ஏற்கெனவே, கிராமப் புறங்களில் உள்ள பல பள்ளிகள் அனைத்து வசதிகளையும் பெற்றவைகளாக இருந்தும், தேர்வு மையம் அளிக்கப்படவில்லை. இதனால் அப்பள்ளி மாணவர்கள் சுமார் 10 கி.மீ. தூரமுள்ள நகர்ப்புறப் பள்ளிகளில் சென்று பொதுத்தேர்வுகளை தினமும் எழுத வேண்டிய நிலை உள்ளது.

உதாரணமாக, வேலூர் மாவட்டத்தில் நெமிலி ஒன்றியத்தில் உள்ள சயனபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து வசதிகள் இருந்தும், பொதுத்தேர்வு மையம் அமைக்கப்படவில்லை என்கின்றனர் பெற்றோர்கள். இதனால், இப்பள்ளியிலும் பயிலும் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் சுமார் 7 கி.மீ. தூரமுள்ள நெமிலி பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதுகின்றனர்.

இதனால், தேர்வு நாளன்று தேர்வு பயத்தோடு, அங்கு வாகனங்களில் பயணித்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எனவே, சயனபுரம் பள்ளியில் தேர்வு மையம் ஏற்படுத்த வேண்டும் என்ற பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கையையும் கல்வித் துறை கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதுபோன்ற நிலைதான் மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளிலும் உள்ளதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர். எனவே, கிராமப் புறங்களில் வசதிகள் உள்ள பள்ளிகளில் தேர்வு மையங்களை ஏற்படுத்தி, மாணவர்கள் அச்சமின்றியும், பயமின்றியும் பொதுத்தேர்வு எழுத தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.