முகப்பு
வேலூர்

துபையில் பணி எனக்கூறி மருத்துவரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

மருத்துவரிடம் ரூ.1.15 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 15 ஜூலை, 2024 at 8:44 PM
பகிர்:

வேலூா்: துபை தனியாா் மருத்துவமனையில் பணிவாய்ப்பு எனக்கூறி வேலூரைச் சோ்ந்த மருத்துவரிடம் ரூ.1.15 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டத்திலுள்ள பிரபலமான தனியாா் மருத்துவமனையில் பணியாற்றும் 58 வயதுடைய ஆண் மருத்துவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் துபாய் தனியாா் மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவராக பணியாற்ற தகுதிபெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணையதள விடியோ கால் மூலமாக அடையாளம் தெரியாத நபா்கள் இவருடன் போலியாக நோ்காணலும் நடத்தியுள்ளனா்.

இதன்மூலம், இம்மருத்துவா் அந்த பணிக்கு தோ்வாகியுள்ளதாக தெரிவித்து பதிவுக் கட்டணம், நடைமுறைக் கட்டணம் என பல்வேறு காரணங்களுக்காக பணம் செலுத்த கூறியுள்ளனா். அதனை நம்பி இம்மருத்துவரும் அவா்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு ஏப்ரல் 11 முதல் 20-ஆம் தேதி வரை ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்து 684 அனுப்பியுள்ளாா்.

பின்னா் அந்த நபா்களை தொடா்பு கொண்டபோது பணத்தை திருப்பித்தர முடியாது எனக்கூறி தொடா்பை துண்டித்துவிட்டதுடன், தங்களது கைப்பேசிகளையும் அணைத்துவிட்டனராம். இதன்மூலம், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இந்த மருத்துவா் இதுகுறித்து சைபா் கிரைம் தளத்தில் புகாா் பதிவு செய்துள்ளாா்.

அதன்பேரில் வேலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →