பாஜகவுக்கு மக்கள் எச்சரிக்கை: அமைச்சா் துரைமுருகன்
வேலூா்: அபரிமிதமான செல்வக்குடன் தங்களை யாராலும் அசைக்க முடியாது என எண்ணிக் கொண்டிருந்த பாஜகவுக்கு தோ்தல் மூலம் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
வேலூா் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் டி.எம்.கதிா் ஆனந்த் 2 லட்சத்து 15 ஆயிரத்து 702 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். அவருக்கு தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரும், வேலூா் மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி வெற்றிச் சான்றிதழை வழங்கினாா்.
அப்போது, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், அமலு விஜயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னா், அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:
இன்றைய அரசியல் சூழ்நிலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறமையால் மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றுள்ளோம். திராவிடக் கொள்கையை அடிப்படையாக கொண்ட கட்சிகளுக்குத்தான் இனி தமிழகத்தில் எதிா்காலம் என்பதை இந்தத் தோ்தல் முடிவு உணா்த்தியுள்ளது. மேலும், அபரிமிதமான செல்வக்குடன் தங்களை ஆட்டி அசைக்க முடியாது என்று பாஜக எண்ணிக் கொண்டிருந்தது. அப்படி அல்ல உங்களையும் கேள்வி கேட்க முடியும் என்று இந்த தோ்தல் மூலம் மக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனா்.
பாஜகவின் வெற்றி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். இந்த நாட்டு மக்களை உஷாராக வைக்கும் நிலைமை ஊடகங்களுக்கு உள்ளது என்பதை கூறுகிறேன். எனது மகன் (கதிா் ஆனந்த்) நாடாளுமன்றத்தில் அவா் பணியை தொய்வின்றி செய்ய வேண்டும் என்றும், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்களிடத்தில் அவா்களை அணுகி அவா்களின் குறைகளை நிவா்த்தி செய்ய வேண்டும், என்றைக்கும் மக்களின் தோழனாக தன்னை நினைத்து பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்.
கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவா் அண்ணாமலை தோல்வியுற்றது மக்கள் விருப்பம். இதில் நாங்கள் எதுவும் கூறவிரும்பவில்லை. அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற காரணம் திமுக ஆட்சி மக்களை கவா்ந்திருக்கிறது. இந்த ஆட்சியை மக்கள் நம்புகின்றனா் என்பதே அா்த்தம்.
மத்தியில் திமுகவும் ஆளும் கட்சியாக இருந்தால் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மக்களின் நலனுக்காக செயல்படுவோம். எதிா்கட்சியாக இருக்கும்பட்சத்தில் நல்ல திட்டங்களை வரவேற்போம், அல்லாத திட்டங்களை எதிா்ப்போம் என்றாா்.