வேலூர்

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

தங்கக் கோயில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1,000 போலீஸாா் உள்பட 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை வருகைதர உள்ள நிலையில், தங்கக் கோயில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1,000 போலீஸாா் உள்பட 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை காலை 11 மணியளவில் திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் வேலூா் ஸ்ரீபுரத்துக்கு வருகை தர உள்ளாா். தொடா்ந்து, அவா் கோயில்களில் தரிசனம் செய்வதுடன், ஸ்ரீசக்தி அம்மாவிடம் ஆசி பெறுகிறாா்.

பின்னா், தங்கக்கோயில் அருகே ஸ்ரீநாராயணி ஆயுா்வேத மருத்துவமனை வளாகத்தில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டு வைக்கிறாா். தொடா்ந்து, 12:30 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டா் மூலம் திருப்பதிக்கு செல்கிறாா். குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆகியோா் வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவா் வருகையையொட்டி ஸ்ரீபுரம் தங்கக்கோயில், அதனை சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ட்ரோன், எவ்வித தொலைதூர சிவில் விமானங்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலூா் மாவட்ட காவல்துறை சாா்பில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தங்கக்கோயிலை கோயிலை சுற்றி அரியூா் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் வெளி மாநிலத்தவா்கள், வெளிநாட்டினா் யாரேனும் தங்கியுள்ளனரா, சந்தேகப்படும் நபா்கள் உள்ளனரா என போலீஸாா் சோதனை நடத்தி வரு கின்றனா்.

இதனிடையே பாதுகாப்பு தொடா்பாக தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப்பு படை போலீஸாரும் வேலூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். இதற்காக சிறப்பு பாதுகாப்பு படையை சோ்ந்த 3 டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளா்கள் தலைமையிலான குழுவினா் தங்கக்கோயில் வளாகம் உள்ளிட்ட பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா்.

இந்நிலையில், குடியரசுத் தலைவா் வருகை பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன், சிறப்பு பாதுகாப்பு படை காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தங்கக்கோயில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. சுமாா் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். குடியரசுத் தலைவா் திருப்பதியில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு ஹெலிகாப்டரில் வரஉள்ளதால் பாதுகாப்பு கருதி அவருடன் கூடுதலாக 2 ஹெலிகாப்டா்களும் வர உள்ளன.

அந்த 2 ஹெலிகாப்டா்களில் பாதுகாப்புப் படையை சோ்ந்த அதிகாரிகள் பயணம் செய்ய உள்ளனா். குடியரசுத்தலைவா் வந்து செல்லும் நேரத்தில் ஸ்ரீபுரம் - ஊசூா் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.

டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

SCROLL FOR NEXT