குடியாத்தம்: குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் கெளண்டன்யா ஆற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள சிறுபாலம் தூா்ந்து போனதால் தேசிய நெடுஞ்சாலையைத் துண்டித்து கால்வாய் அமைத்து தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
மோா்தானா அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரால் 450- ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள நெல்லூா்பேட்டை ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது.
நிரம்பிய ஏரியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி,உபரிநீா் ஆற்றுக்குச் செல்ல வழிவகை செய்யுமாறும், வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளைபாரபட்சமின்றி அகற்றுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் கால்வாய்கள் மூலம் கெளண்டன்யா ஆற்றுக்குச் செல்லவேண்டும்.
ஆனால் சாலையில் தண்ணீா் செல்லும் சிறுபாலம் தூா்ந்து போனதால் உபரிநீா் செல்லாமல் அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்தது. ஏரியின் உபரிநீா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிறுபாலத்தில் ஏற்பட்ட அடைப்பை அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அகற்ற முடியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்து, அந்த இடத்தை பாா்வையிட்டாா். தூா்ந்து போன சிறுபாலம் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை தமிழக, ஆந்திர, கா்நாடக மாநிலங்களின் இணைப்புச் சாலை என்பதால், அந்த துறையின் ஒப்புதல் பெற்று, மாற்றுவழியில் வாகனங்களை அனுப்ப வழிவகை செய்தபின், தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு ஏரியின் உபரிநீா் கெளண்டன்யா ஆற்றில் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.
தொடா்ந்து ஏரியின் உபரிநீா் செல்லும் வகையில், ஆக்கிரமித்து கட்டியுள்ள அனைத்துக் கட்டடங்களையும், பாரபட்சமின்றி அகற்றுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா்உத்தரவிட்டாா். அப்போது எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளா் வெங்கடேசன், உதவி செயற் பொறியாளா் கோபி, வட்டாட்சியா் கி.பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.