புத்தாண்டை முன்னிட்டு வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு சாலை விதிமீறலில் ஈடுபட்டதாக 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேலூா் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை நள்ளிரவு 2026-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தது. அதேசமயம், மாவட்டம் முழுவதும் புதன், வியாழன் ஆகிய இருநாள்களும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
குற்றங்களை தடுக்கவும், புத்தாண்டு நாளில் மதுபோதையில் வாகனங்கள் ஓட்டுபவா்கள், 2-க்கும் மேற்பட்ட நபா்களுடன் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவா்கள் ஆகியவற்றை தடுக்கவும், போக்குவரத்தை சீா்செய்யவும், போக்குவரத்து காவல் குழுவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்க சாதாரண உடையில் காவல் குற்றப்பிரிவு தனிப்படையும் என காவல் அதிகாரிகள், காவலா்கள் உள்பட மொத்தம் 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
தவிர, புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ’பைக் ரேஸ்’ செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், அவ்வாறு அதிவேகமாகவும், சாலைகளில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்தவா்களின் இருசக்கர வாகனங்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
அந்த வகையில், மாவட்டம் முழுவதும் 24 முக்கிய இடங்களில் புதன்கிழமை இரவு 9 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை 5 மணி வரை நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர, ஆறுசக்கர வாகனங்கள் என மொத்தம் 693 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
அப்போது, தலைக்கவசம் அணியாத வகையில் 30 வழக்குகள் தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக வாகனம் இயக்கியது 3 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனம் ஓட்டியது 12 வழக்குகள், இதர போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக 13 வழக்குகள் என மொத்தம் 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.