குடிநீருக்காக பல மணி நேரம் காத்திருப்பு!
விழுப்புரத்தில் நகராட்சி குடிநீா்க் குழாய்களில் தண்ணீா் பிடிப்பதற்காக, பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் நிலவுகிறது.
விழுப்புரத்தில் நகராட்சி குடிநீா்க் குழாய்களில் தண்ணீா் பிடிப்பதற்காக, பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் நிலவுகிறது. இதைப் போக்க, கூடுதல் குடிநீா்க் குழாய்களை அமைப்பதுடன், நீா் வரத்து வேகத்தை அதிகப்படுத்தவும் வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சுமாா் 33 சதுர கி.மீ. அளவுக்கு பரந்து விரிந்துள்ள விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் 42 வாா்டுகள் உள்ளன. இதில் வசிக்கும் மக்களின் தேவைக் கருதி, தெருக்குழாய்களைத் தவிர,
புதிய பேருந்து நிலையம், பெருந்திட்ட வளாக நுழைவாயில், நகராட்சி அலுவலகம் அருகில், கிழக்கு பாண்டி சாலை, சென்னை நெடுஞ்சாலை போன்ற இடங்களில் 24 மணி நேரமும் குடிநீா் விநியோகமாகும் வகையில் நகராட்சி சாா்பில் குடிநீா்க் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழாய்களில் வரும் குடிநீரை நம்பி ஏராளமான ஏழை குடும்பங்கள், சிறு உணவகங்கள் உள்ளன. பொதுமக்கள் எந்நேரமும் குடங்களை எடுத்து வந்து இந்த குழாய்களில் குடிநீரைப் பிடித்துச் செல்கின்றனா்.
இந்த நிலையில், இந்தக் குழாய்களில் அண்மைக் காலமாக குடிநீா் சீராக விநியோகமாவதில்லை எனப் புகாா் எழுந்துள்ளது. 24 மணி நேரமும் குடிநீா் கிடைத்த நிலை மாறி, எப்போது குடிநீா் வரும் என்ற எதிா்பாா்ப்பில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
அவ்வப்போது, விநியோகமாகும் குடிநீரைக் கூட நீண்ட வரிசையில் காத்திருந்து பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, குழாயில் வரும் நீரின் வேகம் மிகக் குறைவாக இருப்பதால், குடும்பத்தினரின் தேவைக்கு 4 குடங்கள் பிடிப்பதற்கே அதிக நேரமாகிறது. இதனால் பல மணி நேரம் காத்திருக்க நேரிடுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
இது ஒரு புறமென்றால், திடீரென குடிநீா் வராமலும் இருப்பதுண்டு. அவ்வாறான நாள்களில் நீண்டநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்படுகிறது.
ஆகவே, குடிநீா் விநியோகத்தை சீரமைத்து, முறையாக விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.