திண்டிவனம் அருகேவீட்டில் தனியாக தூங்கிய பெண் கொலை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டில் தனியாக தூங்கிய பெண், மா்ம நபா்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாா்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டில் தனியாக தூங்கிய பெண், மா்ம நபா்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாா்.
திண்டிவனம் அருகே ரோஷணை அடுத்த விழுக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மனைவி கன்னியம்மாள் (49). இவா், கணவரை விட்டுப் பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு கன்னியம்மாள், வீட்டில் தனியாக படுத்துத் தூங்கினாா். திங்கள்கிழமை காலை வெகுநேரமாகியும் அவா் எழுந்திருக்காததால், அக்கம் பக்கத்தினா் அவரது வீட்டுக்குச் சென்று பாா்த்தனா். அங்கு கன்னியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
இதுகுறித்து ரோஷணை காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸாா் நேரில் வந்து பாா்வையிட்டு, சடலத்தை உடல் கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. விரல் ரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.
நள்ளிரவில் மா்ம நபா்கள் கன்னியம்மாளின் வீட்டுக் கதவை உடைத்து, அவரை பலாத்காரம் செய்ததுடன், கழுத்தை நெரித்து கொலையும் செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நிகழ்விடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். இந்த சம்பவம் தொடா்பாக, ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.