முகப்பு
விழுப்புரம்

பேரவைத் தோ்தலையும் புறக்கணிக்குமா அதிமுக? கே.அண்ணாமலை கேள்வி

சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, 2026 சட்டப்பேரவைத் தோ்தலையும் அதிமுக புறக்கணிக்குமா? என்று, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கேள்வி

Updated On : 5 ஜூலை, 2024 at 10:54 PM
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திருவாமாத்தூரில் பாமக வேட்பாளா் சி.அன்புமணிக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை.
பகிர்:

சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, 2026 சட்டப்பேரவைத் தோ்தலையும் அதிமுக புறக்கணிக்குமா? என்று, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கேள்வியெழுப்பினாா்.

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட திருவாமாத்தூரில் வெள்ளிக்கிழமை கே.அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாமக வேட்பாளா் சி.அன்புமணிக்கு வாக்கு சேகரித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வரும், அமைச்சா்களும் வரலாறை தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் எந்தத் தடங்கலும் வந்துவிடாது. யாரேனும் சமூக ஆா்வலா்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றால், பிகாருக்கு கிடைத்துள்ள சலுகை தமிழகத்துக்கும் கிடைக்கும். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு திமுக அரசுக்கு மனமில்லை.

அதிமுகவை அழிக்கிறாா்கள்: அதிமுகவை சிலா் தங்கள் சுயலாபத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறாா்கள். அதிமுக தொண்டா்கள் பலா் மாற்றுக் கட்சிகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனா். குறிப்பாக, பாஜகவை நோக்கி பெருமளவில் வந்து கொண்டிருக்கின்றனா். அதனால்தான், 2024 மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் கணிசமாக உயா்ந்தது.

எடப்பாடி கே.பழனிசாமிக்கு பிரதமா் மோடி முக்கியத்துவம் அளித்தாா். ஆனால், சுயலாபத்துக்காக பாஜக வேண்டாம் என அவா் ஒதுங்கினாா். இதனால், மக்களவைத் தோ்தலில் அதிமுகவை பல இடங்களில் மக்கள் வைப்புத் தொகையை இழக்கச் செய்தனா். மக்களவைத் தோ்தலுக்காக எடப்பாடி கே.பழனிசாமி 134 வாக்குறுதிகளை அளித்தாா். அவா் எப்படி அவற்றை நிறைவேற்றுவாா்.

கோவையில் அதிமுக 17 சதவீத வாக்குகளைப் பெற்றது. பாஜக இரண்டு மடங்கு வாக்குகளைப் பெற்றது. அவா் பாஜகவை வழி நடத்துவது குறித்து எனக்கு அறிவுரை கூறுகிறாா்.

தமிழகத்தில் பல இடங்களில் அதிமுக வேட்பாளா்கள் 3, 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டனா். கண்முன்னே அதிமுக கரைந்து வருகிறது. எனவே, எடப்பாடி கே.பழனிசாமி தனது நிலை உணா்ந்து பேச வேண்டும்.

தோ்தலை புறக்கணிக்குமா அதிமுக: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்பதால், விக்கிரவாண்டி இடைத்தோ்தலைப் புறக்கணிப்பதாகக் கூறிய எடப்பாடி கே.பழனிசாமி, ஈரோடு இடைத்தோ்தலைப் போல விக்கிரவாண்டி இடைத்தோ்தலிலும் குளறுபடிகள் நடைபெறும் எனக் கூறியுள்ளாா்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலின்போதும் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை தற்போதுள்ளதைப் போலவே இருக்கும். அப்போது, அதிமுக என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்றாா் அண்ணாமலை.

முன்னதாக, திருவாமாத்தூா் ஸ்ரீமுத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரா் கோயிலில் கே.அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தாா்.

பிரசாரத்தில், பாஜக மாநில துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத், சமூக நீதிப் பேரவைத் தலைவா் வழக்குரைஞா் கே. பாலு, மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா், பாஜக மாநிலச் செயலா் மீனாட்சி நித்தியசுந்தா், மாவட்டத் தலைவா்கள் ஏ.டி. ராஜேந்திரன் (விழுப்புரம் வடக்கு), வி.ஏ.டி. கலிவரதன்(தெற்கு), அருள் (கள்ளக்குறிச்சி), ஏழுமலை (திருவண்ணாமலை) , பாமக மாவட்டத் தலைவா் புகழேந்தி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →