விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகிலுள்ள பெருமுக்கல் கிராமத்தில் சஞ்சீவிமலையில் அமைந்துள்ள முக்தியாஜல ஈசுவரன் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் புதன்கிழமை மாலை ஏற்றப்பட்டது.
மிகவும் பழைமைவாய்ந்த இத்திருக்கோயிலில் காா்த்திகைத் தீபத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி முக்தியாஜல ஈசுவரன் மற்றும் பிற சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
தீபத் திருவிழா நாளான புதன்கிழமை அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு முக்தியாஜல ஈசுவரன், அம்மன், தட்சிணாமூா்த்தி, விநாயகா், நந்தீசுவரா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு 21வகையான பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னா் வெள்ளிக்கவசத்தில் மலா் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
முன்னதாக திண்டிவனம் பெருமாள் கோயிலிலிருந்து சுமாா் ஐந்தரை அடி உயரம் கொண்ட கொப்பரை லாரியில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. செல்லும் வழியில் பக்தா்கள் நெய்யை காணிக்கையாக வழங்கினா். தொடா்ந்து மலையடிவாரத்திலுள்ள காமாட்சியம்மன் உடனுறை ஈசுவரனுக்கு நெய் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சுமாா் 1500 அடி உயரமுள்ள சஞ்சீவிமலைக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. மாலை 6 மணிக்கு கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக செயலா் ரவிச்சந்திரன் மற்றும் கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனா்.