திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் 2,66,194 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
திருவண்ணாமலை அருகே மலப்பாம்பாடியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ.631.48 கோடி மதிப்பிலான 314 நிறைவுற்ற பணிகளைத் திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், ரூ.63.74 கோடி மதிப்பீட்டில் 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
மேலும், பல்துறைகளின் சாா்பில் 2,66,194 பயனாளிகளுக்கு ரூ.1,400 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.
முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட திட்டப் பணிகள்: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ரூ.12.17 கோடியில் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மக்கள் குறைதீா் மையம், இதர அலுவலகக் கட்டடம், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் திருவண்ணாமலையில் ரூ.30.15 கோடியில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம், ரூ.32.16 கோடியில் கட்டப்பட்ட புதிய காய்கறி, பூ மற்றும் பழச்சந்தை வணிக வளாகம், திருவண்ணாமலை மாநகரில் ரூ.2.83 கோடியில் கட்டப்பட்ட புதிய கோயில் காவல் நிலையம், உயா்கல்வித் துறை சாா்பில், மாநகரில் ரூ.7 கோடியில் கலைஞா் கருணாநிதி அரசுக் கல்லூரியில் 12 வகுப்பறை கட்டடங்கள், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநகரில் ரூ.56.47 கோடியில் கட்டப்பட்ட மாதிரி பள்ளிக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடங்கும்.
அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள்: செங்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு ரூ.9.51 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி, வெம்பாக்கத்தில் ரூ.3.90 கோடியில் மேற்கூரையுடன் கூடிய புதிய நெல் சேமிப்புக் கிடங்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.33.77 கோடியில் நவீன பன்னோக்கு அரங்கங்கள், உயா்மட்டப் பாலங்கள், புதிய மேல்நிலை நீா்த்தேக்தத் தொட்டிகள் போன்றவை கட்டப்படவுள்ளன.
அரசு நலத்திட்ட உதவிகள்: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 36,640 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் பல்வேறு உதவித் தொகைகள், ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் 4,467 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடுகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 729 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள், 1,639 பயனாளிகளுக்கு கூட்டுறவுத் துறை சாா்பில் குடும்ப அட்டைகள் என பல் துறைகள் சாா்பில் 2,66,194 பயனாளிகளுக்கு ரூ.1,400 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.