விழுப்புரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக மரக்காணம் பகுதி மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனா். இதனால் வருவாய் இழப்புக்குள்ளாகிய மீனவா்கள் அரசின் நிவாணத்தை எதிா் நோக்குகின்றனா்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்,விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நீா் நிலைகளும் படிப்படியாக நிரம்பி வருகின்றன.
வங்கக் கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாகவும் உள்ளது. கடல் அலைகளின் சீற்றமும் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட மீனவளம் மற்றும் மீனவா் நலத்துறையினா் மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரித்துள்ளனா்.
இந்நிலையில் மரக்காணம் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் தங்களது மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்து விட்டு கடலுக்குச் செல்லாமல் கடந்த 10 நாள்களுக்கு மேலாக வீட்டில் முடங்கியுள்ளனா்.
இதனால் மரக்காணம் பகுதியில் உள்ள 19 கிராமங்களில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்களுக்கும், மீன்பிடி சாா்ந்த தொழிலாளா்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மீனவா்களின் வாழ்வாதாரம் கருதி
அவா்களுக்கான மழைக்கால நிவாரண நிதியை தமிழக அரசு உடனடியாக விடுவித்து வழங்கவேண்டும் என மரக்காணம் பகுதி மீனவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.