விழுப்புரம்: பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் நகராட்சியில் தூய்மைப்பணியாளா்கள் சுமாா் 96 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கான வருங்கால வைப்புநிதியில் முறைகேடாக எடுக்கப்பட்ட ரூ.9 கோடிக்கும் மேலான தொகையை மீண்டும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். நகராட்சித் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உறைகள் வழங்க வேண்டும். அரசு சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும். பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, இந்த தா்னா நடைபெற்றது.
தூய்மைப்பணியாளா்கள் சங்க நிா்வாகி முருகன் தலைமையில் நடைபெற்ற தா்னாவில் ஏராளமானோா் பங்கேற்று, கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.