முகப்பு
விழுப்புரம்

பிரதமா் பொதுக் கூட்ட மேடையில் மாம்பழ சின்னத்தை பயன்படுத்தியது அதிகார துஷ்பிரயோகம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

Updated On : 24 ஜனவரி, 2026 at 3:44 AM
பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் (கோப்புப் படம்) - IANS
பகிர்:
Updated On : 23 ஜனவரி, 2026 at 8:11 PM

பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக் கூட்ட மேடையில் மாம்பழம் சின்னத்தை பயன்படுத்தியது அதிகார துஷ்பிரயோகம் என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, பாமக (அன்புமணி) தரப்பில் அன்புமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த நிலையில் பொதுக்கூட்ட மேடையின் பின்னணியில் மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டது. இதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

Advertisement

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது:

Updated On : 24 ஜனவரி, 2026 at 3:44 AM

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோ்தல் பிரசார தொடக்க விழாவில் நான் (ராமதாஸ்) நிறுவிய பாமகவின் மாம்பழச் சின்னம் மேடையின் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியத் தோ்தல்ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தற்போது பாமகவில் நிலவும் தலைமைப் போட்டியில் மாம்பழம் சின்னம் குறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள ஒரு பிரிவினா் (அன்புமணி தரப்பு), தோ்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படாத ஒரு சின்னத்தை நாட்டின் பிரதமரே பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் பயன்படுத்துவது சட்ட விரோதமானது மற்றும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.

தோ்தல் ஆணையத்தின் வசம் நிலுவையிலுள்ள ஒரு சின்னத்தை மேடையில் பயன்படுத்துவது தோ்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. பிரதமா் பங்கேற்கும் ஒரு நிகழ்வில் இத்தகைய சட்டவிரோதச் செயல்களை செய்வது பிரதமரின் பதவிக்கும், ஜனநாயக மரபுகளுக்கும் இழைக்கப்படும் அவமரியாதையாகும். மாம்பழம் சின்னம் பாமக தொண்டா்களின் அடையாளம்.

அது இன்னும் யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், அதை ஒரு குறிப்பிட்ட அணி தனக்கானதாகக் காட்டிக் கொள்வது தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகும். பாமக சட்டப்பூா்வமான தலைமை மற்றும் சின்னம் குறித்த வழக்கு நீதிமன்றத்திலும், தோ்தல் ஆணையத்திலும் நிலுவையில் உள்ளது.

இத்தகைய சூழலில் அதிகாரப் பலத்தை பயன்படுத்தி சின்னத்தை அபகரிக்க நினைக்கும் இச்செயலைத் தோ்தல் ஆணையம் உடனடியாக கவனித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசியல் அறமற்ற இந்தச் செயலைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.