குடிநீரில் குளோரின் கலக்கப்படுவதை ஆய்வு செய்து வாரம்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
நீரினால் பரவும் நோய் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் நடந்தது.சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜவகர்லால் மற்றும் அனைத்து நகராட்சி ஆணையர்கள், குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சிகள் உதவி இயக்குநர், மாவட்ட மலேரியா அலுவலர் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் ஆட்சியர் பேசியது: 2012-13-ஆம் ஆண்டு (ஜனவரி முதல் ஜூன் வரை) வயிற்றுப்போக்கால் அதிகமாக பாதிக்கப்பட்ட கடலூர், புவனகிரி, கம்மாபுரம், மங்கலம்பேட்டை, நல்லூர் மற்றும் மங்களூர் வட்டாரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
32 சதவீதம் குளோரின் உள்ள பிளீச்சிங் பவுடர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.குடிநீர் தொட்டிகளில் கொள்ளளவுக்கு சரியாக (1000 லிட்டருக்கு 4.2 கிராம்) குளோரினேஷன் செய்ய வேண்டும். குளோரின் மாத்திரைகளை இதற்காக பயன்படுத்தக் கூடாது.
குடிநீரில் குளோரின் கலக்கப்பட்டிருக்கிறதா? என்பதை குடிநீர் வடிகால் அலுவலர்கள் பரிசோதித்து அதன் அறிக்கையை ஒவ்வொரு திங்கள்கிழமையும், ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் நோயினால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிக குறைந்த நபர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயைப் பரப்பும் ஏடீஸ் வகை கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் நீர்சேமிப்பு கொள்கலன்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருள்கள், உடைந்த பானை ஓடுகள், தேங்காய் மட்டைகள், கொட்டாங்குச்சிகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
வீடு வீடாக ஆய்வு செய்து அதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.