மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 2.40 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்: கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார்
தமிழக முதல்வர் ஆணைப்படி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொகுதிக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்தில் தேவையான உதவி உபகரணங்கள்
சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா உதவி உபகரணங்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஆணைப்படி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொகுதிக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்தில் தேவையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் ரூ.5 லட்சத்தில், ரூ.2 லட்சத்தில் இரண்டு கால்கள் செயலிழந்து, கைகள் நல்ல நிலையில் உள்ள கல்லூரி அல்லது பணிக்கு செல்லும், சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் 2 நபர்களுக்கு மோட்டார் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களும், இரு நபர்களுக்கு நவீன செயற்கை கால் அல்லது கையும், 2 நபர்களுக்கு காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலி கருவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மீதமுள்ள ரூ 3லட்சத்தில் விலையில்லா உதவி உபகரணங்கள் வழங்கும் விழா சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 4 பேருக்கும், மடக்கு சக்கர நாற்காலிகள் 5 பேருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வழங்கினார்.