அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு அறிவியல் ஆய்வகம் திறப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித் துறை சார்பில், பல்கலைக்கழக மானியக் குழு நிதி உதவியில் விளையாட்டு அறிவியல்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித் துறை சார்பில், பல்கலைக்கழக மானியக் குழு நிதி உதவியில் விளையாட்டு அறிவியல் ஆய்வகம் கட்டப்பட்டது. இதை புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
விழாவில், துணைவேந்தர் எஸ்.மணியன் தலைமையில் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், பதிவாளர் கே.ஆறுமுகம், ஆட்சிக் குழு (சிண்டிகேட்) உறுப்பினர்கள் வி.திருவள்ளுவன், எம்.உமாமகேஸ்வரன், பொறியில் துறை புல முதல்வர் ஆண்டனி ஜெயசேகரன், கல்வியியல் புல முதல்வர் பாபு, அறிவியல் புல முதல்வர் கபிலன், கலைப்புல முதல்வர் செல்வராஜ், மருத்துவ புல முதல்வர் ராஜ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர், யு.சண்முகம், உடற்கல்வித் துறைத் தலைவர் சுதன்பால்ராஜ், கல்வித் துறைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், ஞானதேவன், பல்கலைக்கழக கல்வி இயக்குநர் கே.மணிவண்ணன், தேர்வுத் துறைக் கட்டுப்பாட்டு அதிகாரி ராம.சந்திரசேகரன், தொலைதூரக் கல்வி இயக்குநர் எம்.அருள் மற்றும் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
முதல்வர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்ததும், பல்கலைக்ழக துணைவேந்தர், பதிவாளர், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர், சிண்டிகேட் உறுப்பினர்கள், புல முதல்வர்கள் அனைவரும் குத்துவிளக்கேற்றி ஆய்வகத்தைத் தொடக்கி வைத்தனர்.
பின்னர், துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்ததாவது: விளையாட்டு அறிவியல் ஆய்வகத்துக்கான மொத்த மதிப்பீட்டு ரூ. 2.40 கோடி.
இதில் ஒரு கோடியே ஐம்பது லட்சம் கட்டடத்துக்கானது. மீதமுள்ள தொண்ணூறு லட்சம் ரூபாய் ஆய்வகத்துக்கான உபகரணங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும். இதன் மூலம் விளையாட்டுத் துறை ஆராய்ச்சி மாணவர்கள் இந்த ஆய்வகத்தைப் பயன்படுத்தி தன்னுடைய விளையாட்டுத் திறனையும், அதற்கான ஆராய்ச்சிகளையும் மேம்படுத்த உதவியாக இருக்கும் என்றார் துணைவேந்தர் செ.மணியன்.