கடலூர்

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளின் பெயர் பதிவு: தினமணி செய்தி எதிரொலி

தினமணி

கடலூர் மாவட்டத்தில் கரைமேடு தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்திலும், கடலூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் பொது சேவை மையம் மூலமும் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கடன் பெறாத விவசாயிகளைப் பதிவு செய்து, அதற்கான ரசீதுகளை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே புதன்கிழமை வழங்கினார்.
 கடலூர் மாவட்டத்தில் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்வதற்கு நவம்பர் 30- ஆம் தேதி கடைசி நாளாகும்.
 வங்கிகள், கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகளிடமிருந்து பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியத் தொகை பிடித்தம் செய்யப்படும் நிலையில், கடன் பெறாத விவசாயிகளை இந்தத் திட்டத்தில் சேர்க்காமல் அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
 இதுதொடர்பான விரிவான செய்தி நவம்பர் 14- ஆம் தேதி தினமணியில் வெளியானது. இந்த நிலையில், கடன் பெறாத விவசாயிகளைப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யும் பணி கரைமேடு தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்து பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அதற்கான ரசீதுகளை வழங்கினார்.
 தொடர்ந்து, கடலூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் பொது சேவை மையம் மூலம் பதிவு செய்த விவசாயிகளுக்கும் அதற்கான ரசீதுகளை ஆட்சியர் வழங்கினார்.
 பின்னர், அவர் கூறியதாவது: விவசாயிகள் அனைவரும் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நவம்பர் 30- ஆம் தேதிக்குள் பதிவுகள் செய்ய வேண்டும். மாவட்டதில் இதுவரையில் 8 ஆயிரம் பேர் பிரீமியத் தொகை கட்டியுள்ளனர்.இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த சம்பா நெல் பயிரில் மகசூல் பாதிப்பு ஏற்பட்ட கிராம விவசாயிகளுக்கு வங்கிகள், கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் இதுவரை ரூ. 88 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
 கடலூர் மாவட்டத்தில் உள்ள 168 தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும், 85 பொது சேவை மையங்கள், அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.
 பயிர்க் காப்பீடு தொடர்பான சந்தேகங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
 வேளாண் இணை இயக்குநர் நாட்ராயன், துணை இயக்குநர்கள் ஆர்.சம்பத்குமார், வ.கனகசபை, உதவி இயக்குநர்கள் சு.பூவராகன், பாலசுப்ரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சொ.இளஞ்செல்வி, துணைப் பதிவாளர் கா.சுந்தர், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் டி.தனராஜன், கரைமேடு கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர் ஆர்.பிரபாகரன், செயலர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT