விருத்தாசலத்தில் ராஜகோபால சுவாமி கோயில் தேரோட்டம்
விருத்தாசலம் ராஜகோபாலசுவாமி கோயில் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விருத்தாசலம் ராஜகோபாலசுவாமி கோயில் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விருத்தாசலம், தெற்கு பெரியார் நகரில் ஸ்ரீகெங்கைவள்ளி தாயார், பூமாதேவி உடனுறை ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பிந்து மாதேஸ்வர உற்ஸவம் கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில், ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளை உற்சவங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது. பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா சென்றனர்.
6-ஆம் நாள் திருவிழாவாக திங்கள்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருத்தேர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீகெங்கைவள்ளி தாயார், பூமாதேவியருடன் ஸ்ரீராஜகோபாலசுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து திருத்தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டு, கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். மேள தாளங்கள் முழங்கிட முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் பவனி நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் தேங்காய் உடைத்தும், ஆரத்திகள் எடுத்தும் சுவாமியை வழிபட்டனர். திருத்தேர் முக்கிய வீதிகளைச் சுற்றி வந்து நிலையை அடைந்தது. தொடர்ந்து சுவாமிகள் திருத்தேரிலேயே பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். பின்னர், படிபூஜைகள் மேற்கொள்ளப்பட்டு இரவில் மேளதாளத்துடன் கோயிலுக்கு சுவாமிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிகழ்வுகளில் விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.