துப்புரவு வாகனம் கவிழ்ந்து 6 சிறுவர்கள் காயம்
கடலூர் நகராட்சி துப்புரவு பேட்டரி வாகனம் கவிழ்ந்ததில் 6 சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
கடலூர் நகராட்சி துப்புரவு பேட்டரி வாகனம் கவிழ்ந்ததில் 6 சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
கடலூர் புதுப்பாளையம் முத்துக்குமரன் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (45). கடலூர் நகராட்சி துப்புரவுத் தொழிலாளி. இவர், தனது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்த நகராட்சி துப்புரவு பேட்டரி வாகனத்தில் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளை அவ்வப்போது ஏற்றி சுற்றி வந்து மகிழ்விப்பாராம்.
அதேபோல, ஞாயிற்றுக்கிழமை காலை 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை துப்புரவு பேட்டரி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். கடற்கரைச் சாலையில் உப்பனாறு அருகே சென்றபோது, அந்த வாகனம் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில், வாகனத்தின் கீழ் பகுதியில் சிக்கி சாரதி (9), சிவநேசன் (3), தீபன் (7), அஸ்வின் (8), கீர்த்திவாசன் (4), திலீப்குமார் (15) ஆகிய 6 சிறுவர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு,"108' அவசர ஊர்தி மூலம் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சிவநேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், அவர் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தேவனாம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.