காவல் நண்பர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
காவல் நண்பர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
காவல் நண்பர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்ட காவல் துறையினருக்கு உதவிடும் வகையில் 200 பேர் காவல் நண்பர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள், அந்தந்தப் பகுதிகளில் காவல் துறையினருடன் இணைந்து இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடுவதோடு, சட்டவிரோத செயல்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்து வருகின்றனர். மேலும், திருவிழா காலங்களில் காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புத்தாக்கப் பயிற்சி முகாம் கடலூரில் காவலர் நல திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தலைமை வகித்து பயிற்சி முகாமை தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
இயற்கை வளம் நிறைந்த கடலூர் மாவட்டம் மனித வளம் குறைபாடுகளால் பின்தங்கியுள்ளது. எனவே, காவல் நண்பர்கள் தங்களது திறமையால் இந்த மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும். காவல் துறைக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக விளங்கக் கூடிய காவல் நண்பர்களின் அர்ப்பணிப்பு பணி பாராட்டுக்குரியது. கடலூர் மாவட்டம் குற்றமில்லா மாவட்டமாக திகழ்ந்திட காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் துணைக் கண்காணிப்பாளர் பழனி, ஆய்வாளர் தேவி, புனித வளனார் கல்லூரிப் பேராசிரியர்கள் சந்தானராஜ், அன்னம்மாள் ஆகியோர் புத்தாக்கப் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் பங்கேற்ற காவல் நண்பர்களுக்கு சீருடையும், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.