கோடை வெயிலை வாகன ஓட்டிகள் சமாளிக்கும் வகையில், கடலூரில் காவல் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை நேரடியாகச் சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ள இடங்களில் கடும் வெயிலில் சுமார் ஒரு நிமிடம் வரை காத்திருத்து செல்ல வேண்டியிருக்கும். இதனால், ஏற்படும் அசௌகரியம், வியர்வை, உடல் பாதிப்புகளில் இருந்து வாகன ஓட்டிகளை தற்காத்திட கடலூர் போக்குவரத்து காவல் துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, பாரதி சாலையில் 2 இடங்களில் போக்குவரத்து சிக்னலில் நிழல் விழும் வகையில் தற்காலிக ஏற்பாடாக நிழல் தரும் வலையை அமைத்தனர். கடலூர் சிறகுகள் அமைப்பு மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அமைப்பை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ப.சரவணன் வியாழக்கிழமை பார்வையிட்டு பாராட்டினார். தொடர்ந்து, கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் காவலர்களுக்கு நீர்மோர் வழங்கினார். அப்போது, கடலூர் சரக துணைக் கண்காணிப்பாளர் க.சாந்தி, போக்குவரத்து ஆய்வாளர் ப.அப்பாண்டைராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோன்ற நிழல் தரும் அமைப்பானது மேலும் 2 இடங்களில் அமைக்கப்பட உள்ளதாக கடலூர் சிறகுகள் அமைப்பினர் தெரிவித்தனர். மேலும், கூடுதலாக தண்ணீர் பந்தல்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.