விழிப்புணர்வு ஓவியங்களால் மிளிரும் அரசுப் பள்ளிகள்: ஓய்வுபெற்ற ஆசிரியரின் சேவை
ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் அரசுப் பள்ளிகளில் மனதைக் கவரும் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகிறார்.
ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் அரசுப் பள்ளிகளில் மனதைக் கவரும் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகிறார்.
தனியார் பள்ளிகள் மீதான மோகம் பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தி, தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் அரசுப் பள்ளிகளில் ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் 30 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ரெ.ரவி (63). புதுவை அரசின் கலைமாமணி, சிறந்த நல்லாசிரியர் விருதுகளைப் பெற்றுள்ளார். இவர், கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம், புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளின் சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகிறார். அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்கம், இயற்கை சூழல் உள்ளிட்ட ஓவியங்களை வரைகிறார். இந்த ஓவியங்கள் அரசுப் பள்ளிகள் மீதான மதிப்பை பொதுமக்களிடம் மேம்படுத்தும் வகையில் உள்ளன. இதுவரை 15}க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் ஓவியங்களை இலவசமாக வரைந்துள்ளார் ரவி. இவரது சேவையைப் பாராட்டும் வகையில், ஓவியங்களுக்கு தேவையான பெயின்ட், உபகரணங்களை சிலர் தாமாக முன்வந்து வாங்கித் தருகின்றனர்.
சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளி சுவர்களில் ஓவியங்கள் வரையும் பணியில் ரவி தற்போது ஈடுபட்டுள்ளார். அவர் கூறியதாவது:
எனது மனைவி காந்திமதியும் ஓவிய ஆசிரியை. பணி ஓய்வுக்குப் பிறகு, எனது மனைவி ஆதரவுடன் 60 மாணவர்களை கொண்டு ஓவியப் பயிற்சி பள்ளியைத் தொடங்கினேன். அதேநேரத்தில் மக்களிடம் தனியார் பள்ளிகள் மீதான மோகம் அதிகரிப்பு, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை நினைத்து வருத்தப்பட்டேன். ஏழை பெற்றோர் கடன் பெற்று தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை பார்த்துள்ளேன். இதனால், ஓவியப் பயிற்சி பள்ளியைக் கலைத்துவிட்டு, எனது மனைவி மற்றும் என்னுடன் பணியாற்றிய 15 ஓவிய ஆசிரியர்களுடன் இணைந்து "சன் பைன் ஆர்ட்ஸ்' என்ற அமைப்பைத் தொடங்கினேன்.
இதன்மூலம், தமிழகம், புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகிறோம். இதை மாணவர்களும், அவர்களது பெற்றோரும் வரவேற்கின்றனர்.
இதனால் எங்களுக்கு மன நிம்மதி கிடைக்கிறது. அரசுப் பள்ளிகளைக் காக்க இந்தப் பணியை தொடர்ந்து மேற்கொள்வோம் என்றார் அவர்.