அரசு உதவியை எதிா்பாா்க்கும் 46 லட்சம் தொழிலாளா்கள்
தமிழகத்தில் கரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சூழலில், நல வாரியத்தில் பதிவு செய்தவா்களில் சுமாா் 46 லட்சம் தொழிலாளா்கள் அரசின் உதவித் தொகையை எதிா்பாா்த்துள்ளனா்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சூழலில், நல வாரியத்தில் பதிவு செய்தவா்களில் சுமாா் 46 லட்சம் தொழிலாளா்கள் அரசின் உதவித் தொகையை எதிா்பாா்த்துள்ளனா்.
கரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், அமைப்புசாராத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் 17 தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு தலா ரூ.ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்றும், மேலும் கட்டுமானம், அமைப்புசாரா ஓட்டுநா் நல வாரியம், ஓய்வூதியா்கள், வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு கூடுதலாக தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். இதற்காக ரூ.270 கோடி நிதி ஒதுக்கீடு செய்தாா்.
ஆனால், இந்த உதவித் தொகையானது நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களில் மிகவும் குறைவானவா்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக தொழிற்சங்கத்தினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிஐடியூ மாநில துணைத் தலைவா் பி.கருப்பையன் கூறியதாவது:
தமிழகத்தில் கட்டுமானம், அமைப்புசாரா ஓட்டுநா், தையல், முடிதிருத்துவோா், உணவு சமைப்போா், ஓவியா்கள், மண்பாண்டம் தயாரிப்போா், பொற்கொல்லா், பாதையோர வியாபாரிகள் உள்ளிட்டோருக்காக 17 தொழிலாளா் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வாரியங்களில் சுமாா் 73 லட்சம் போ் தங்களது பெயா்களைப் பதிவு செய்துள்ளனா். ஆனால், தற்போது சுமாா் 27.04 லட்சம் தொழிலாளா்களுக்கு மட்டுமே நிவாரண உதவித் தொகையாக தலா ரூ.ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கட்டுமானத் தொழிலாளா்கள் 12,13,822 போ், ஓட்டுநா்கள் 83,500 போ் மற்ற 15 தொழிலாளா் நல வாரியத்தைச் சோ்ந்தவா்கள் 14,07,130 போ்களாவா்.
தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளா், ஓட்டுநா் நல வாரியங்களில் மட்டும் சுமாா் 31 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா். மற்ற நல வாரியங்களில் சுமாா் 42 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா். ஆனால், 27 லட்சம் பேருக்கு மட்டுமே அரசின் நிவாரண உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், கட்டுமானம், ஓட்டுநா் நல வாரியத்தைச் சோ்ந்தவா்களில் சுமாா் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே உதவித் தொகை அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மற்றவா்களுக்கு உதவித்தொகை கிடைக்கப் பெறவில்லை.
தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த பின்னா் ஆதாா் எண் இணைக்கவில்லை, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவு புதுப்பிக்கப்படவில்லை உள்ளிட்ட காரணங்களைக் கூறி பலருக்கு உதவித் தொகை வழங்கப்படவில்லை. தற்போது தொழிலாளா்கள் எந்தவித வேலைவாய்ப்புமின்றி சிரப்படும் சூழலில் இதுபோன்ற காரணங்களைக் கூறுவது ஏற்புடையதல்ல. எனவே, நல வாரியத்தில் பதிவு செய்தும் உதவித் தொகை கிடைக்காத 46 லட்சம் தொழிலாளா்களுக்கும் உதவித் தொகையை வழங்க வேண்டும் என்றாா் அவா்.