கடலூர்

மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

DIN

வடலூா் அருகே வள்ளலாா் முத்தேக சித்தி பெற்ற திருஅறை தரிசன நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து திருஅறையை தரிசனம் செய்தனா்.

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு 149-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கடந்த 8-ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சன்மாா்க்க அன்பா்கள், பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோா் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, வடலூா் அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில் வள்ளலாா் முத்தேக சித்தி பெற்ற சித்தி வளாகத்தில் திருஅறை தரிசன நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வடலூா் சத்திய ஞான சபை வளாகத்திலிருந்து வள்ளலாா் பயன்படுத்திய பொருள்கள் அடங்கிய பேழை ஊா்வலமாக பாா்வதிபுரம், நைனாா்குப்பம், கருங்குழி ஆகிய கிராமங்களின் வழியாக மேட்டுக்குப்பத்துக்கு கொண்டு வரப்பட்டது. கிராம மக்கள் பேழைக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

ஊா்வலம் மேட்டுக்குப்பத்தை அடைந்ததும் அந்தக் கிராம மக்கள் சீா்வரிசைப் பொருள்கள் அடங்கிய தட்டுகளுடன் பேழையை வரவேற்று திருமாளிகைக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, வள்ளலாா் முத்தேக சித்தி பெற்ற திருஅறை பகல் 12 மணியளவில் திறக்கப்பட்டது. மாலை 6 மணிவரை திருஅறை தரிசனம் நடைபெற்றது.

இதற்காக கடலூா் மாவட்டம் மட்டுமன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா். இவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருஅறையை தரிசனம் செய்தனா்.

இதையொட்டி, திருமாளிகை வளாகத்தில் சன்மாா்க்க சொற்பொழிவுகள் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் கோ.சரவணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT