முகப்பு
கடலூர்

கோவையில் மூன்று கோயில்களைச் சேதப்படுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கைது

கோவை, டவுன்ஹால், ஐந்து முக்கு பகுதியில் மாகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் முன்பு தீப்பற்ற வைத்த டயரை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு வீசிச் சென்றனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

கோவை, டவுன்ஹால், ஐந்து முக்கு பகுதியில் மாகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் முன்பு தீப்பற்ற வைத்த டயரை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு வீசிச் சென்றனர். 

மேலும் கோயில் முன்பு உள்ள திரிசூலத்தை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதேபோல கோவை ரயில் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோயில், கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் செல்வ விநாயகர் கோயிலிலும் மர்ம நபர்கள் டயர்களைக் கொளுத்தி வீசிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸார் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸார் ஆய்வு செய்ததில், மூன்று சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் என்பது தெரியவந்தது. 

சம்பவத்தில் தொடர்புடைய தப்பித்திருக்கக் கூடும் என கருதப்பட்டதால் அந்த நபர் குறித்து திருப்பூர், ஈரோடு, சேலம் காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டனர், சுங்கச்சாவடிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகளில் இருந்த நபரின் புகைப்படத்தைக் கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த கஜேந்திரன்(48) என்பது தெரியவந்தது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து கடந்த 14ஆம் தேதியன்று தப்பியோடிய இவர் மருத்துவமனை அருகே இருந்த இருசக்கர வாகனம் ஒன்றைத் திருடி அங்கிருந்து தப்பி சேலம் பள்ளப்பட்டியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் வீட்டில் இருந்தவர்களுடன் சண்டையிட்டு வீட்டில் இருந்த தலையணை, போர்வைகளை வீட்டின் முன்பு தீ வைத்து எரித்த இவர் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு கோவை வந்துள்ளார்.
 இந்நிலையில் கோவை அவினாசி சாலை ஆர்.ஜி.புதூர் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவ்வழியே வந்த கஜேந்திரனை அடையாளம் கண்டு, அவரைப் பிடித்து விசாரித்தனர். இதில் கோயில்கள் முன்பு டயர்களைக் கொளுத்தி வீசியது அவர் தான் என தெரியவந்தது. 

இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
 கோயில்கள் முன்பு டயர்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தில் குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என இந்து அமைப்பின் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், கைது செய்யப்பட்ட கஜேந்திரன் எந்த அமைப்பையும் சேர்ந்தவர் இல்லை என கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் கூறினார். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவாரன கஜேந்திரன் ஆத்திரமடையும் போதெல்லாம் வீட்டில் உள்ள பொருள்களை தீயிட்டு கொளுத்துவது வழக்கம் என்பதை காவல்துறையினரிடம் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட கஜேந்திரனிடம் காவல்துறையினர் மேலும் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →