முகப்பு
கடலூர்

இணையதளம் மூலம் ஊதியம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜூலை மாத ஊதியம் வழங்குவதில் சிக்கல்!

டிஜிட்டல் முறையில் இணையதளம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
டிஜிட்டல் முறையில் இணையதளம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பகிர்:

சிதம்பரம்: டிஜிட்டல் முறையில் இணையதளம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆதிரியர்களுக்கு அந்த துறை தலைமை அதிகாரி ஊதியப்பட்டியலை தயாரித்து அருகாமையில் உள்ள கருவூலத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற்றவுடன் ஊழியர்களின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும். தற்போது ஊதியம் அளிக்கும் முறையை டிஜிட்டல் முறையான ஒருங்கிணைந்த நிதி மற்றும் மணிதவள மேலாண்மை (IFHRMS- Integrated Financial and Human Resource Management System) என்ற புதிய முறையில் இணைய தளம் மூலம் ஊதியம் வழங்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இம்முறையில் ஒரு அரசு ஊழியரின் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, பதவி, பணியில் சேர்த்த தேதி உள்ளிட்ட அனைத்து  விபரங்களையும் இணையதளம் மூலம் பதிவு செய்துவிட்டால், ஆண்டு ஊதிய உயர்வு, பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் தேர்வு நிலை, சிறப்பு நிலை, முதல் பணி நிறைவு பலன்கள் வரை தானாகவே கணக்கீடு செய்யப்பட்டு ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆனால் IFHRMS முறையை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய கட்டமைப்பு வசதிகளையும், இணையதள வசதிகளையும் அரசு மேம்படுத்தவில்லை என்பதால் கடந்த மாதம் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு காலதாமதமாக ஊதியம் வழங்கப்பட்டது. இச்சிக்கலால் பழைய முறையில் பல்வேறு துறைகளுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய மென்பொருளில் தொழில்நுட்பக் கோளாறு உள்ளதால், ஊழியர்கள் விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக அப்பணியை மேற்கொண்டுளஅள அலுவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் நிர்வாகிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பழைய நடைமுறையில் ஊதியம் வழங்க வேண்டும். புதிய முறைக்கு தடை பெற்றுள்ளனர். மேலும் இந்த புதிய நடைமுறையால் நிதி உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் தங்களது கையொப்பம் இல்லாமலேயே ஊதியப்பட்டியல் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுவதால், தங்களது உரிமை பறிக்கப்படுவதாகலும், ஊதியப்பட்டியல் தயாரிப்பு பணி தங்களது கட்டுப்பாட்டில் இல்லையெனில் முறைகேடுகள் நடப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வருகிற ஜூலை 24-ம் தேதிக்குள் புதிய நடைமுறையில் ஊழியர்களின் விபரங்களை பதிவு செய்யவில்லை எனில் ஜூலை மாத ஊதியம் பெற இயலாது என்றும், இதுவே கடை வாய்ப்பு எனவும் கருவூலத்துறை மூலம் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தலும், பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர இயலாத நிலையில் பல்வேறு தொழில்நுட்பக்கோளாறு உள்ளதாலும், IFHRMS முறையை நடைமுறைப்படுத்த 2 அல்லது 4 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வருகிற ஜூலை மாத ஊதியம் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படுமா என கேள்விக்குறியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.