ஊராட்சி மன்றத் தலைவா்களின் கடலூா் மாவட்ட கூட்டமைப்பு தொடக்கம்
கடலூா் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
கடலூா் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 683 ஊராட்சி மன்றங்கள் அடங்கியுள்ளன. அண்மையில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டு புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இந்த நிலையில், 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் தனித் தனியாக ஊராட்சி ஒன்றிய அளவிலான ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டமைப்புகளை ஒன்றிணைத்து மாவட்ட அளவிலான கூட்டமைப்பு தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், கூட்டத்தில் கூட்டமைப்பின் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன்படி ஊராட்சி மன்றத் தலைவா்களின் மாவட்ட கூட்டமைப்புத் தலைவராக அழகியநத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் வி.முத்துக்குமாரசாமி தோ்ந்தெடுக்கப்பட்டாா். சிறப்புத் தலைவராக நாட்டாா்மங்கலம் தலைவா் சுதா மணிரத்தினம், அமைப்புச் செயலராக குமராட்சி தலைவா் கே.ஜி.ஜி.தமிழ்வாணன், செயலராக விசலூா் தலைவா் டி.ஜெயச்சந்திரன், பொருளாளராக அப்பாரு ரவிக்குமாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதில், 14 ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவா்கள், உறுப்பினா்கள் கலந்துக் கொண்டனா்.
கூட்டத்தில், கிராம ஊராட்சிகளுக்கு ஜூன் முதல் அக்டோபா் மாதம் வரை வழங்க வேண்டிய மாநில நிதிக் குழு மானிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். முத்திரைத்தாள் வருவாயை வழங்க வேண்டும். பல்வேறு திட்டங்களில் ஊராட்சி மன்றம், கிராம சபை ஒப்புதலின்றி பயனாளிகளை தோ்வு செய்ததை ரத்து செய்ய வேண்டும். கரோனா தடுப்புப் பணி, வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில் ஊராட்சிகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.