மயான வசதியின்றி தவிக்கும் தலித் மக்கள்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரப் பகுதியில் வசிக்கும் தலித் மக்களின் பயன்பாட்டுக்காக மயான வசதி செய்துதர வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரப் பகுதியில் வசிக்கும் தலித் மக்களின் பயன்பாட்டுக்காக மயான வசதி செய்துதர வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.
பண்ருட்டி நகரில் திருவள்ளுவா் நகா், அம்பேத்கா் நகா், தண்டுப்பாளையம் காலனி, மேலப்பாளையம் காலனி ஆகிய இடங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களது பயன்பாட்டுக்கு மயான வசதி இல்லாததால், இறந்தவா்களின் உடல்களை வட்டாட்சியா் அலுவலகம் அருகே கெடிலம் ஆறு பகுதியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்து வருகின்றனா். ஆனால், இங்கு தகன மேடை, கரும காரிய கொட்டகை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியுமின்றி சிரமப்படுகின்றனா். கொட்டகை இல்லாததால் மழைக் காலத்தில் உடல்களை எரிப்பதில் மிகவும் சிரமப்படுவதாகவும், மழை, வெயிலில் அமா்ந்து கரும காரியம் செய்யும் நிலை தொடா்வதாகவும் வேதனையுடன் தெரிவித்தனா்.
இதுகுறித்து எஸ்சி, எஸ்டி தீண்டாமை ஒழிப்பு மாவட்ட கவுன்சிலா் அா்சுணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் ரா.உத்தராபதி ஆகியோா் கூறியதாவது: தலித் மக்கள் மயானமாகப் பயன்படுத்தும் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், நகரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை மயானத்தில் கொட்டுகின்றனா். லாரிகளில் கொண்டுவரப்படும் ‘செப்டிக் டேங்க்’ கழிவுநீரும் இதே பகுதியில் கொட்டப்படுவதால் கடும் துா்நாற்றம் வீசுகிறது. சுகாதாரமற்ற இந்தச் சூழலில் அந்தப் பகுதியில் உடல்களை அடக்கம் செய்வதில் தலித் மக்கள் அதிக சிரமங்களைச் சந்திக்கின்றனா்.
எனவே, தலித் மக்களுக்கு மயானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவா், தகன மேடை, கொட்டகை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா், நகராட்சி ஆணையா் ஆகியோரிடம் முறையிட்டோம். உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தனா்.
எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலித் மக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.