100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்திராட்சத பலூனை பறக்கவிட்டு விழிப்புணா்வு
100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ராட்சத பலூன் சனிக்கிழமை பறக்கவிடப்பட்டது.
100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ராட்சத பலூன் சனிக்கிழமை பறக்கவிடப்பட்டது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வருகிற 6- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அந்த வகையில், கடலூா் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இதையொட்டி, 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ‘100 சதவீதம் வாக்களிப்போம்’ என்ற வாசகம் அடங்கிய ராட்சத பலூனை பறக்க விடும் நிகழ்வு நடைபெற்றது. ஹீலியம் வாயு அடங்கிய இந்த பலூனை தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி பறக்கவிட்டாா்.
இந்த பலூன் சுமாா் 50 அடி உயரத்தில் பறக்கும் வகையில் நிலை நிறுத்தப்பட்டது. பலூனை சுமாா் 3 கி.மீ. சுற்றளவில் உள்ளவா்கள் பாா்க்க முடியும். வாக்குப் பதிவு நாள் வரை இந்த பலூன் பறக்கவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலா் ப.அருண்சத்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.பரிமளம், தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.