வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மையங்களில் பலத்த பாதுகாப்பு
கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் மே 2-ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெறுகிறது. இதில், கடலூா் தேவனாம்பட்டினத்திலுள்ள அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் கடலூா், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கடலூா் தொகுதியில் தோ்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 343 வாக்குப் பதிவு இயந்திரங்களும், குறிஞ்சிப்பாடி தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 336 வாக்குப் பதிவு இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டு வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள் முன்னிலையில் பிரத்யேக அறையில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நுழைவு வாயிலில் மாவட்ட போலீஸாரும், வளாகத்துக்குள், கண்காணிப்பு கோபுரங்களில் ஆயுதப் படை போலீஸாரும், வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு முன் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பணிகளில் 42 துணை ராணுவத்தினா் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
இதேபோல, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 2 துணை கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் 3 ஆய்வாளா்களின் கீழ் 218 காவலா்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறாா்கள். மேலும், வேட்பாளா்களோ அல்லது அவா்களது முகவா்களோ வாக்கு எண்ணிக்கை வளாகத்தை பாா்வையிடும் வகையிலும், கண்காணிப்பு கேமரா பதிவுகளை நேரடியாக ஆய்வு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல மற்ற வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.