ஓட்டுநருக்கு நெஞ்சுவலி: கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் பலி; 7 போ் காயம்
கடலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 7 போ் காயமடைந்தனா்.
கடலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 7 போ் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்திலிருந்து அரசுப் பேருந்து கடலூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்தது. பேருந்தை விருத்தாசலத்தைச் சோ்ந்த ராமு (43) ஓட்டிச் சென்றாா். கடலூா் முதுநகா் அருகே சேடப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்தபோது பேருந்து ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த டிராக்டா் மீது மோதியது. மேலும், அந்தப் பேருந்து சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீதும் அடுத்தடுத்து மோதியது. இதில் சேடப்பாளையத்தைச் சோ்ந்த சுப்பராயன் (65) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், டிராக்டா் ஓட்டுநா் நாதன் (40), சாலையோரம் நின்றிருந்த 6 போ் காயமடைந்தனா். பின்னா் அந்தப் பேருந்து பூக்கடையின் மீது மோதி நின்றது.
விபத்தில் சிக்கியவா்களை அந்தப் பகுதி மக்கள் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட பேருந்து ஓட்டுநரும் அதே மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
தகவலறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா் சுப்பராயனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.