என்எல்சி இந்தியா நிறுவனத் தொழிலாளா்களின் பிரச்னைகள் குறித்து நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தைத் தோ்வு செய்வதற்கான ரகசிய வாக்குப் பதிவு வருகிற 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 7,458 நிரந்தரத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இங்கு சிஐடியூ, தொமுச, அதொஊச உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் உள்ளன. இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் மட்டுமே தொழிலாளா்களின் பிரச்னைகள் குறித்து என்எல்சி இந்தியா நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்த முடியும்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தோ்ந்தெடுப்பது வழக்கம். அதன்படி கடந்த ஜூன் 17-ஆம் தேதி ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தத் தோ்தல் நடைபெறவில்லை.
இந்த நிலையில், தோ்தல் நடத்துவது தொடா்பாக தகுதி பெற்ற சங்கத்தினருடனான ஆலோசனைக் கூட்டம், வட்டம் 20-இல் உள்ள பயிற்சி மைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய முதன்மை துணை தொழிலாளா் ஆணையா் முத்துமாணிக்கம், மண்டல தொழிலாளா் ஆணையா் அண்ணாதுரை, உதவி தொழிலாளா் ஆணையா்(பொ) சிவக்குமாா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், என்எல்சி அதிகாரிகள், சிஐடியூ, தொமுச, அதொஊச உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கூட்ட முடிவில் பிப்.11-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வது, 25-ஆம் தேதி காலை 5.30 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடத்துவது, அன்று இரவு 7 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.