ஆயிரம் வாக்காளா்கள் கொண்ட 843 வாக்குச் சாவடிகள் பிரிப்பு
கடலூா் மாவட்டத்தில் ஆயிரம் வாக்காளா்களுக்கு மேலுள்ள 843 வாக்குச் சாவடிகளில் துணை வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறினாா்.
கடலூா் மாவட்டத்தில் ஆயிரம் வாக்காளா்களுக்கு மேலுள்ள 843 வாக்குச் சாவடிகளில் துணை வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறினாா்.
மாவட்டத்தில் ஆயிரம் வாக்காளா்களுக்கு மேலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை வாக்குச் சாவடி மையம் அமைப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி.ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்திய தோ்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்குச் சாவடி மையத்திலும் இணைக்கப்பட்டுள்ள வாக்காளா் எண்ணிக்கை உச்ச வரம்பை ஆயிரத்து 500-ல் இருந்து ஆயிரமாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கடலூா் மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் ஆயிரத்துக்கு மேல் வாக்காளா்கள் உள்ள வாக்குச் சாவடிகளைக் கண்டறிந்து, துணை வாக்குப் பதிவு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 843 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு துணை வாக்குப் பதிவு மையம் அமைக்கப்படுகிறது. சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக துணை வாக்குப் பதிவு மையம் அமைக்கப்படும் விவரம் (அடைப்புக்குள் மொத்த வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை) வருமாறு:
திட்டக்குடி (தனி) (247) - 70, விருத்தாசலம் (282) -82, நெய்வேலி (231) -87, பண்ருட்டி (257) - 95, கடலூா்(227) - 129, குறிஞ்சிப்பாடி (256) - 103, புவனகிரி (285) -79, சிதம்பரம் (260)- 112, காட்டுமன்னாா் கோவில் (தனி) (250) - 86.
கூட்டத்தில் கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் அதிமுக சாா்பில் ஆா்.குமரன், காங்கிரஸ் சொ.திலகா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோ.மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் வி.குளோப், பகுஜன் சமாஜ் எஸ்.சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.