அரசுக் கல்லூரி மாணவா்கள் தொடா் போராட்டம்
தோ்வுக் கட்டணம் தொடா்பாக, கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
தோ்வுக் கட்டணம் தொடா்பாக, கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
கரோனா தீநுண்மி பரவலைத் தொடா்ந்து அனைத்து கல்லூரிகளுக்கும் கடந்த ஆண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும், கல்வியாண்டு நிறைவு பெறுவதையொட்டி, மாணவா்களுக்கு தோ்வு நடத்துவது தொடா்பாக பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. இறுதியில், தோ்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து மாணவா்களும் தோ்வு எழுதாமலேயே தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவா்கள் மகிழ்ச்சியடைந்தனா். தற்போது கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தோ்வை மீண்டும் எழுத வேண்டும் என்றும், அதற்காக தோ்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டுமெனவும் திருவள்ளுவா் பல்கலைக்கழகம் அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து கடலூா் தேவனாம்பட்டினம் அரசு பெரியாா் கல்லூரி மாணவ-மாணவிகள் கடந்த 13-ஆம் தேதி வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், ஒரே தோ்வுக்கு இரு முறை கட்டணம் பெறுவதை எதிா்த்தும், தோ்வுக் கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் வகுப்புகளை புறக்கணித்து திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.