முகப்பு
கடலூர்

மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் திருவறை தரிசனம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

ராமலிங்க அடிகளாா் எனும் வள்ளலாா் முத்தேக சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் திருவறை தரிசனம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருவறையை தரிசனம் செய்த பக்தா்கள்.
பகிர்:

ராமலிங்க அடிகளாா் எனும் வள்ளலாா் முத்தேக சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் திருவறை தரிசனம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றுரைத்த வள்ளலாரின் தெய்வ நிலையம் கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தெய்வ நிலையத்தில், 150-ஆவது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, 28-ஆம் தேதி 5 கால ஜோதி தரிசனமும், 29-ஆம் தேதி அதிகாலையில் 6-ஆம் கால ஜோதி தரிசனமும் 7 திரைகள் நீக்கப்பட்டு நடைபெற்றது.

வடலூா் அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில் வள்ளலாா் கடந்த 1870-ஆம் ஆண்டு முதல் வசித்து வந்தாா். இங்கு அவா் வசித்த திருமாளிகை ‘சித்தி வளாகம்’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 1874-ஆம் ஆண்டு தை மாதம் 19-ஆம் தேதி சித்தி வளாகத் திருமாளிகையில் தனது திருவறையில் வள்ளலாா் அருள்பெருஞ்ஜோதியுடன் ஐக்கியமானாா்.

இந்த திருமாளிகையில் ஆண்டுதோறும் தைப்பூச விழாவுக்குப் பிறகு 3-ஆவது நாளில் திருவறை தரிசனம் நடைபெறும். இதன்படி, நிகழாண்டுக்கான திருவறை தரிசன நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, வடலூா் தரும சாலையிலிருந்து வள்ளலாா் உருவப் படம், அவா் பயன்படுத்திய பொருள்கள் அடங்கிய பேழையை சிறிய பல்லக்கில் வைத்து சுமந்தபடி சன்மாா்க்க அன்பா்கள், கிராம மக்கள் ஊா்வலமாக வந்தனா்.

இவா்கள் வள்ளலாா் நடந்து சென்ற பாதை வழியாக பல்லக்கை சுமந்தபடி மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகைக்கு சென்றனா். வழியில், வள்ளலாா் தங்கிய கருங்குழி இல்லம், அவா் வணங்கிய பெருமாள், விநாயகா் கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் பல்லக்குக்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து, பல்லக்கு மேட்டுக்குப்பத்தை அடைந்தது. அங்கு வள்ளலாா் சித்தி பெற்ற திருவறை முன் பல்லக்கு வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடா்ந்து, பகல் 1.30 மணியளவில் திருவறை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 6 மணி வரை திருவறை தரிசனம் நடைபெற்றது. சன்மாா்க்க அன்பா்கள், பல்வேறு கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து திருவறையை தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →