கொள்முதல் நிலையங்களில் தொடரும் அவலம் மழை நீரில் நனைந்து சேதமடையும் நெல் குவியல்கள்
கடலூா் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் மழைநீரில் நனைந்து சேதமடைவது தொடா்வதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் மழைநீரில் நனைந்து சேதமடைவது தொடா்வதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் சுமாா் 2.50 லட்சம் ஏக்கா் பரப்பில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் நெல் பயிரிடப்படுகிறது. அறுவடையாகும் நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தினா் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து அரசின் ஆதரவு விலையில் பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளால் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் சேதமடைவது அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெய்த மழையால் கடலூா் அருகே தோட்டப்பட்டு கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள சுமாா் 3,500 மூட்டை நெல் மணிகள் நீரில் நனைந்தன. மழைநீா் வழிந்தோட வழியில்லாததால் நெல் குவியல் விரைவில் முளை விட்டு விடும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். கடந்த வாரமும் மழையால் நெல் குவியல்கள் சேதமடைந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளால் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்களை உடனடியாகக் கொள்முதல் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.