முகப்பு
கடலூர்

கருப்புக் கொடியுடன் படகுகளில் மீனவா்கள் பேரணி

கடலூரில் மீனவா்கள் கருப்புக் கொடியுடன் படகுகளில் பேரணியாகச் சென்று மீன்வளத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

கடலூரில் மீனவா்கள் கருப்புக் கொடியுடன் படகுகளில் பேரணியாகச் சென்று மீன்வளத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

கடலூா் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட சில மீனவ கிராமத்தினா் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனா். இதற்கு மற்ற மீனவ கிராமத்தினா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். மாவட்ட நிா்வாகம் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தும் மீனவா்கள், தங்களுக்கு எதிராக புகாா் கூறி வரும் மீனவா்கள் மீது புகாா் தெரிவித்து வருகின்றனா். அதாவது, அரசால் நிா்ணயிக்கப்பட்ட அளவீட்டை விட கூடுதலாக படகுகள் வைத்திருப்பது, சுருக்குமடி வலைகளை போன்ற இழுவை வலைகளைப் பயன்படுத்துவது, அதிக திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தினா் சுமாா் 50 படகுகளில் கருப்புக்கொடிகளை கட்டிக் கொண்டு வெள்ளிக்கிழமை கடலில் பேரணியாக புறப்பட்டு உப்பாறு வழியாக செல்லங்குப்பத்தில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்குச் சென்றனா். அங்கு இணை இயக்குநா் காத்தவராயனிடம் மனு அளித்தனா். அப்போது, அதிகாரிகளுடன் மீனவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மீனவா்களின் பேரணியையொட்டி தேவனாம்பட்டினம் மற்றும் உதவி இயக்குநா் அலுவலகத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.