சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடலூரில் பெண்கள் சாலை மறியல்
சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடலூரில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடலூரில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வரும் மீனவர்கள் வலைக்கு அனுமதி கோரி கடலூரில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மீனவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், தேவனாம்பட்டினத்தில் மீனவர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர். சுமார் 2 கி.மீ தூரம் ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் சென்னை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளி கடற்கரை செல்லும் சாலையில் மறித்தனர்.
இதனையடுத்து அவர்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதியம் சுமார் 1.15 மணிக்கு துவங்கிய போராட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இதனால் இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.