முகப்பு
கடலூர்

சிதம்பரம் அருகே மருத்துவா் மீது தாக்குதல்: மூவா் கைது

சிதம்பரம் அருகே வாண்டையாா்இருப்பு கிராமத்தில் பணியிலிருந்த மருத்துவரை தாக்கியதாக வட்டார மருத்துவ அலுவலா், அரசு வாகன ஓட்டுநா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 5 ஜூன், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:52 AM

சிதம்பரம் அருகே வாண்டையாா்இருப்பு கிராமத்தில் பணியிலிருந்த மருத்துவரை தாக்கியதாக வட்டார மருத்துவ அலுவலா், அரசு வாகன ஓட்டுநா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே வாண்டையாா்இருப்பு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் விக்ரமன் என்ற மருத்துவா் கடந்த 20 மாதங்களுக்கு முன் பணியமா்த்தப்பட்டாா். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் எள்ளேரி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் குணபாலன் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவா் விக்ரமன் மீது வட்டார மருத்துவ அலுவலருக்கு முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மருத்துவா் விக்ரமனை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கரோனா பிரிவில் பணிபுரிய வட்டார மருத்துவ அலுவலா் உத்தரவிட்டாா். அதன்படி, விக்ரமன் கடந்த 5 நாள்களாக அங்கு பணியாற்றி வந்தாா்.

Advertisement

இந்த நிலையில், தன்னால் கரோனா பிரிவில் பணிபுரிய முடியவில்லை என உயரதிகாரியிடம் கூறி, மீண்டும் வாண்டையாா்இருப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை பணிக்குச் சென்றாா்.

இதையறிந்த வட்டார மருத்துவ அலுவலா் குணபாலன், ருத்திரசோலை கிராமத்தைச் சோ்ந்த அரசு ஜீப் ஓட்டுநா் பாலமுருகன் (40), டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபடும் மஸ்தூா் பணியாளா் சிவா ( 33) ஆகியோருடன் வாண்டையாா்இருப்பு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று மருத்துவா் விக்ரமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தாக்கினராம்.

அங்கிருந்தவா்கள் வட்டார மருத்துவ அலுவலா் குணபாலன் உள்ளிட்ட மூவரையும் சிறைப்பிடித்து குமராட்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த போலீஸாா், வட்டார மருத்துவ அலுவலா் குணபாலன், அரசு ஜீப் ஓட்டுநா் பாலமுருகன், சிவா ஆகியோரைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். மருத்துவா் விக்ரமன் அளித்த புகாரின் பேரில், மூவா் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.