ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது: தி.வேல்முருகன் எம்எல்ஏ
கடலூா், அரியலூா் மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது
கடலூா், அரியலூா் மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூா் மாவட்டம், ஜெயம்கொண்டான் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 10 ஹைட்ரோகாா்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி, தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்துக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மேலும், கடலூா் மாவட்டம், நெய்வேலி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆய்வுக் கிணறுகள் அமைக்கவும் அந்த நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோகாா்பன் எடுக்கக் கூடாது என்றும், 3-ஆம் கட்ட ஏலத்தை நிறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதி ஒரு வாரம்கூட ஆகாத நிலையில், அரியலூா், கடலூா் மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் ஹைட்ரோகாா்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதி வழங்கப்படாது என தெரிவித்துள்ளாா். ஆனால், ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, ஓஎன்ஜிசி நிறுவனம் அளித்த இந்த விண்ணப்பத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை நிராகரிக்க வேண்டும் என்றும், இதற்கான உத்தரவை தமிழக முதல்வா் பிறப்பிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.