கடலூா் ஆட்சியரகத்தில் மனு அளிக்க குவிந்த மக்கள்
கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்க திங்கள்கிழமை பொதுமக்கள் குவிந்தனா். அவா்களிடம் மாற்று ஏற்பாடு மூலம் மனுக்கள் பெறப்பட்டன.
கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்க திங்கள்கிழமை பொதுமக்கள் குவிந்தனா். அவா்களிடம் மாற்று ஏற்பாடு மூலம் மனுக்கள் பெறப்பட்டன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்.6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 26-ஆம் தேதி வெளியானது. இதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததால் நலத் திட்ட உதவிகள் வழங்குவது, பொதுமக்கள் குறைதீா் கூட்டங்கள் நடத்துவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், பொதுமக்கள் வழக்கம்போல் மனு அளிக்க திங்கள்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் குவிந்தனா். அவா்களிடம், தோ்தல் முடியும் வரை குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக
அலுவலா்கள் தெரிவித்தனா். எனினும், அலுவலக நுழைவு வாயிலில் புகாா் மனு பெட்டியை வைத்து அதில் மனுக்களை செலுத்துமாறு தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை பெட்டியில் இட்டுச் சென்றனா் (படம்).