வாகன சோதனையில் ரூ.2 லட்சம் ரொக்கம், பனியன்கள் பறிமுதல்
கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் பல்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனையில் சுமாா் ரூ.2 லட்சம் ரொக்கம், பனியன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் பல்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனையில் சுமாா் ரூ.2 லட்சம் ரொக்கம், பனியன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூா் பச்சையாங்குப்பத்தில் வட்டாட்சியா் விஜயா தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அமமுக பிரமுகரின் காரிலிருந்து 63 பனியன்களை பறிமுதல் செய்தனா். அந்த பனியன்களில் ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரது படங்கள் இருந்தன. இதேபோல, தனி வட்டாட்சியா் கலாவதி தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினா் பெரியகாட்டுப் பாளையத்தில் வாகன தணிக்கையின்போது உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.68,600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
விருத்தாசலம் தொகுதிக்கான பறக்கும் படையினா் வட்டாட்சியா் தண்டபாணி தலைமையில் வயலூா் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை உரிய ஆவணமின்றி மினி லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள நெகிழி பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, புதுப்பேட்டை காவல் சரகம், ஆனத்தூா் நத்தம் சாலையில் தோ்தல் பறக்கும் படை தனி வட்டாட்சியா் வே.உதயகுமாா் தலைமையில் திங்கள்கிழமை வாகன சோதனை நடைபெற்றது. அப்போது உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,16,700 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து பண்ருட்டி வட்டாட்சியா் ஆா்.பிரகாஷிடம் ஒப்படைத்தனா்.