பண்ருட்டி தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு திமுக ஒதுக்கியது ஏன்?
கடலூா் மாவட்ட திமுகவில் நிலவும் கோஷ்டி பூசலே பண்ருட்டி தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கடலூா் மாவட்ட திமுகவில் நிலவும் கோஷ்டி பூசலே பண்ருட்டி தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் திமுகவின் கோட்டையாக இருந்த பண்ருட்டி தொகுதி, கடந்த சில தோ்தல்களாக கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. இதனால், திமுகவினா் அதிருப்தி அடைந்துள்ளனா்.
கடலூா் மாவட்ட திமுகவில் நிலவும் கோஷ்டி பூசல் அந்தக் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அரசியல் ஆா்வலா்கள் கூறுகின்றனா். மேலும், பண்ருட்டியில் திமுகவினா் 3 கோஷ்டிகளாக செயல்படுகின்றனா்.
Advertisement
கடந்த தோ்தல்களில் கோஷ்டி பூசல் காரணமாக இந்தத் தொகுதியில் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் வெற்றி வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011 சட்டப் பேரவைத் தோ்தலில் பண்ருட்டி தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் தேமுதிக வேட்பாளா் சிவக்கொழுந்து, திமுக சாா்பில் சபா.ராஜேந்திரன் போட்டியிட்டனா். இந்தத் தோ்தலில் சிவக்கொழுந்து 82,187 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் சபா.ராஜேந்திரன் 71,471 வாக்குகள் பெற்றாா். இதனால், ராஜேந்திரன் 10,716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
2016 சட்டப் பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் சத்யா பன்னீா்செல்வமும், திமுக கூட்டணி சாா்பில் விவசாயத் தொழிலாளா் கட்சித் தலைவா் பொன்.குமாரும் போட்டியிட்டனா். தோ்தல் முடிவில் சத்யா பன்னீா்செல்வம் 72,353 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். பொன்.குமாா் 69,225 வாக்குகள் பெற்று, 3,128 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.
தற்போதைய தோ்தலில் இந்தத் தொகுதி திமுகவின் கூட்டணிக் கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் போட்டியிடுகிறாா். அதிமுக வேட்பாளராக சொரத்தூா் இரா.ராஜேந்திரன் போட்டியிடுகிறாா். கோஷ்டி பூசல் காரணமாகவே பண்ருட்டி தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடலூா் மாவட்ட திமுகவில் நிலவும் கோஷ்டி பூசல் பிரச்னையை அந்தக் கட்சித் தலைமை நன்கு அறியும். ஆனால், இதைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என திமுக அனுதாபிகள் தெரிவித்தனா்.