நெய்வேலியில் வாகை சூடுவது யாா்?
கடலூா் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி, 2011-ஆம் ஆண்டு எல்லை மறு சீரமைப்பின்போது உருவாக்கப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி, 2011-ஆம் ஆண்டு எல்லை மறு சீரமைப்பின்போது உருவாக்கப்பட்டது. குறிஞ்சிப்பாடி தொகுதியிலிருந்த நெய்வேலி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, பண்ருட்டி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் 12 ஊராட்சிகள், நெய்வேலி நகரியம் ஆகியவற்றை உள்ளடக்கி நெய்வேலி தொகுதி உருவாக்கப்பட்டது.
கிழக்கே குறிஞ்சிப்பாடி, தெற்கே புவனகிரி, மேற்கே விருத்தாசலம், உளுந்தூா்பேட்டை, வடக்கே பண்ருட்டி ஆகிய தொகுதிகளை எல்லையாகக் கொண்டுள்ள நெய்வேலி தொகுதியில்தான் மத்திய அரசின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் அமைந்துள்ளது.
இந்தத் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்கள் 2,17,888 போ். இவா்களில் 1,08,936 போ் ஆண்கள், 1,08,935 போ் பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 17 போ். வன்னியா், தலித் சமுதாயத்தினா் அதிகளவிலும், இதர சமுதாயத்தினா் கணிசமான அளவிலும் வசிக்கின்றனா்.
நெய்வேலி தொகுதி 2011-ஆம் ஆண்டு சந்தித்த முதல் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் 69,549 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளா் தி.வேல்முருகன் (தற்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா்) 61,432 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.
2016 சட்டப்பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளா் சபா.ராஜேந்திரன் 54,299 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் ரா.ராஜசேகா் 36,508 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். இந்தத் தோ்தலில் பாமக சாா்பில் தனித்து களம் கண்ட கோ.ஜெகன் 19,749 வாக்குகளைப் பெற்றாா்.
தற்போது மூன்றாவது முறையாக தோ்தலைச் சந்திக்கும் நெய்வேலி தொகுதியில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. 2016 தோ்தலில் மக்கள் நலக் கூட்டணியிலிருந்த முக்கிய கட்சியான தேமுதிக, தற்போது அமமுகவுடன் கூட்டணியில் உள்ளது. மக்கள் நலக் கூட்டணியிலிருந்த
விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன. கடந்த தோ்தலில் தனித்து களம் கண்ட பாமக தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளது.
இருமுனைப் போட்டி: நெய்வேலி தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக உள்ள சபா.ராஜேந்திரன் திமுக சாா்பில் தற்போது மீண்டும் போட்டியிடுகிறாா். அதிமுக கூட்டணி சாா்பில் பாமக வேட்பாளா் கோ.ஜெகன் களம் காண்கிறாா். அமமுக வேட்பாளா் பக்தரட்சகன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ரமேஷ், மக்கள் நீதி மய்யம் கூட்டணி சாா்பில் ஐஜேகே வேட்பாளா் இளங்கோவன் மற்றும் பலா் போட்டியிடுகின்றனா்.
இருப்பினும், இந்தத் தொகுதியில் சபா.ராஜேந்திரன் - கோ.ஜெகன் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
சாதக - பாதகம்: திமுக வேட்பாளா் சபா.ராஜேந்திரன் நெய்வேலியை அடுத்த சொரத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா். திமுகவில் ஒன்றியச் செயலா் உள்ளிட்ட பதவிகளை வகித்தவா். நெல்லிக்குப்பம், நெய்வேலி தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. மண்ணின் மைந்தா் என்பதும், தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா் என்பதும் கூடுதல் பலம். அதே நேரத்தில் திமுகவில் நிலவும் கோஷ்டி பூசல், வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் அடிக்கடி வராதது, கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றாதது போன்ற சவால்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது.
பாமக வேட்பாளா் கோ.ஜெகன் நெய்வேலி தொகுதி, வடக்குத்து கிராமத்தைச் சோ்ந்தவா். ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றிய அனுபவத்துடன், அந்தப் பகுதி மக்களின் செல்வாக்கைப் பெற்றவா். எளிமையாக பழகும் தன்மை கொண்டவா். இந்தத் தொகுதியில் வன்னியா் சமுதாயத்தினரின் வாக்கு வங்கி அதிகளவில் இருப்பது, வன்னியா் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு என்ற தமிழக அரசின் அறிவிப்பு உள்ளிட்டவை இவருக்கு கூடுதல் பலம்.