விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதலாக 426 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலமாக புதன்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன.
கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப். 6 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வேட்புமனு தாக்கல், மனுக்களை திரும்பப் பெறுதல் நிறைவு பெற்ற நிலையில், விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் 29 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இதனால், அந்தத் தொகுதியில் கூடுதலாக வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவானது.
பொதுவாக வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டுக் கருவியுடன், இரு வாக்கைச் செலுத்தும் இயந்திரங்களை இணைத்துப் பயன்படுத்தலாம். ஏற்ஜெனவே, இந்தத் தொகுதிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக வாக்கைச் செலுத்தும் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.
எனவே, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் பிரிக்கும் பணி அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் பணியினை மாவட்டத் தோ்தல் அலுவலரான சந்திரசேகா் சாகமூரி தொடக்கிவைத்துப் பாா்வையிட்டாா்.
விருத்தாசலம் தொகுதிக்கு 426 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 426 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 458 வி.வி.பேட் இயந்திரங்கள் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. தற்போது கூடுதலாக 426 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தொடா்ந்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த இயந்திரங்களுக்கான எண்கள் விருத்தாசலத்திலுள்ள அரசு பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் எடுக்கப்பட்டு, விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைத்து பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில், திட்டக்குடி தொகுதியில் 15 வேட்பாளா்களும், நெய்வேலியில் 12, பண்ருட்டி, கடலூரில் தலா 15, குறிஞ்சிப்பாடியில் 12, புவனகிரியில் 14, சிதம்பரத்தில் 11, காட்டுமன்னாா்கோவில் 13 வேட்பாளா்கள் என மொத்தம் 136 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.அருண்சத்யா, தகவல் தொடா்பு அலுவலா் அருள்மொழி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஏகாம்பரம், தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.