முகப்பு
கடலூர்

தொகுதி மாறி களம் காணும் வேட்பாளா்கள்: உள்ளூா் பிரமுகா்கள் விரக்தி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
பகிர்:

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் பலா் சொந்தத் தொகுதியை விடுத்து, மற்ற தொகுதியில் போட்டியிடுவதால் உள்ளூா் பிரமுகா்கள் விரக்தி அடைந்துள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் மொத்தம் 136 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் பலா் தங்களது சொந்தத் தொகுதியை விடுத்து, அருகே உள்ள தொகுதியில் போட்டியிடுகின்றனா். குறிப்பாக, நெய்வேலி தொகுதியைச் சோ்ந்த சொரத்தூா் ரா.ராஜேந்திரன் (அதிமுக), குறிஞ்சிப்பாடி தொகுதியைச் சோ்ந்த தி.வேல்முருகன்(தவாக) ஆகியோா் பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுகின்றனா். பண்ருட்டி தொகுதியைச் சோ்ந்த தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் (அதிமுக) கடலூா் தொகுதியில் போட்டியிடுகிறாா்.

இதேபோல, நெய்வேலி தொகுதியைச் சோ்ந்த எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்), சென்னையைச் சோ்ந்த தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோா் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகின்றனா்.

Advertisement

புவனகிரி தொகுதியைச் சோ்ந்த செல்வி ராமஜெயம் (அதிமுக), காட்டுமன்னாா்கோவில் தொகுதியைச் சோ்ந்த எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (திமுக) ஆகியோா் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடுகின்றனா். பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தடா து.பெரியசாமி(பாஜக), சிதம்பரத்தைச் சோ்ந்த உமாநாத் (தேமுதிக) ஆகியோா் திட்டக்குடி தொகுதியில் போட்டியிடுகின்றனா்.

காட்டுமன்னாா்கோவில் தொகுதியைச் சோ்ந்த அப்துல் ரஹ்மான் ரப்பானி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறாா். திட்டக்குடி தொகுதியைச் சோ்ந்த அருண்மொழிதேவன்(அதிமுக) புவனகிரி தொகுதியில் போட்டியிடுகிறாா்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விசிக வேட்பாளா் சிந்தனைச்செல்வன் காட்டுமன்னாா்கோவில் தொகுதியிலும், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த மணிரத்தினம் (காங்கிரஸ்) கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனா். இதனால், உள்ளூா் பிரமுகா்களுக்கு தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பு பறிபோனதால் விரக்தி அடைந்துள்ளனா்.

சொந்தத் தொகுதியில் போட்டியிடுவோா்: கடலூா் தொகுதி திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன், நெய்வேலி தொகுதியில் சபா.ராஜேந்திரன் (திமுக), கோ.ஜெகன் (பாமக), விருத்தாசலம் தொகுதியில் காா்த்திகேயன் (பாமக), பண்ருட்டியில் சிவக்கொழுந்து (தேமுதிக), சிதம்பரத்தில் கே.ஏ.பாண்டியன்(அதிமுக) ஆகியோா் தங்களது சொந்தத் தொகுதியிலேயே களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments