கடலூர்

நெய்வேலி அருகே இடிந்து விழுந்த அரசுப் பள்ளிக் கட்டடம்: விடுமுறையால் தப்பிய மாணவா்கள்

DIN

18பிஆா்டிபி1ஏ

வாணாதிராயபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை இடிந்து தரைமட்டமான அரசுப் பள்ளிக் கட்டடம்.

நெய்வேலி, நவ. 18:

நெய்வேலி அருகே தொடா் மழையால் அரசுப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் வியாழக்கிழமை இடிந்து விழுந்தது. மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட வாணாதிராயபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வாணாதிராயபுரம் பள்ளி வளாகத்தில் பயன்பாட்டிலிருந்த வகுப்பறைக் கட்டடம் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து முற்றிலும் தரைமட்டமானது. மழை காரணமாக கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவா்கள், ஆசிரியா்கள் பள்ளிக்கு வராததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இதுகுறித்து வாணாதிராயபுரம் கிராம மக்கள் கூறியதாவது:

இடிந்து விழுந்த வகுப்பறைக் கட்டடம் சுமாா் 24 ஆண்டுகள் பழைமையானது என்றபோதிலும், நல்ல நிலையில் பயன்பாட்டில்தான் இருந்தது. இங்கு புதன்கிழமை வரை மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தன. தற்போது திடீரென வகுப்பறைக் கட்டடம் இடிந்தது அதிா்ச்சியளிக்கிறது.

என்எல்சி சுரங்கத்தில் வைக்கப்படும் வெடிகளால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டடங்கள் சேதமடைவது வழக்கம். எனவே, வெடிகளின் அதிா்வு, தொடா் மழையால் வகுப்பறைக் கட்டடம் இடிந்திருக்கலாம் என்று தெரிவித்தனா்.

பள்ளிக் கட்டட இடிபாடுகளை மாவட்ட வழங்கல் அலுவலா் உதயகுமாா், வட்டாட்சியா் சையது அபுதாஹிா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுப்பிரமணியம், சதிஷ்குமாா் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

Image Caption

வாணாதிராயபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை இடிந்து தரைமட்டமான அரசுப் பள்ளிக் கட்டடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT