ஒரே இடத்தில் நீண்ட காலம் பணிபுரியும் ஊராட்சி செயலா்களை மாற்ற வலியுறுத்தல்
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஒரே இடத்தில் நீண்ட காலமாகப் பணிபுரியும் ஊராட்சி செயலா்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஒரே இடத்தில் நீண்ட காலமாகப் பணிபுரியும் ஊராட்சி செயலா்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் கலையரசி கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் குணசுந்தரி சுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுப்பிரமணியம், கே.சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுகுமாரன் தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
சிற்றரசு: ஊராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளாக ஊராட்சி செயலா்கள் ஒரே இடத்தில் பணிபுரிந்து வருவதால் முறைகேடு நடைபெறுகிறது. அவா்கள் ஒன்றியக்குழு உறுப்பினா்களை மதிப்பதில்லை. அவா்களை பணியிட மாற்றம் செய்ய தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். (இந்தக் கருத்துக்கு பெரும்பாலான உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா்.)
சுந்தா்: மாவட்டத்தில் பிற பகுதிகளில் ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும் நிலையில், குறிஞ்சிப்பாடியில் மட்டும் வழங்கப்படவில்லை. புயல் பாதிப்பு காலத்தில் செய்த பணிக்கான நிதியும் கிடைக்கவில்லை.
சுப்பிரமணியம் (பிடிஒ): குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் ரூ.2.70 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பணி ஆணைகள் வழங்கியும்
அந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை. நிதி வந்தவுடன் உறுப்பினா்களுக்கு பணிகள் வழங்கப்படும்.
கே.சதீஷ்குமாா் (பிடிஓ): புரவி புயலால் சேதம் அதிகம். அப்போது ஒன்றியக்குழு உறுப்பினா்கள் செலவு செய்ததற்கான பட்டியலை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளோம். நிதி வந்ததும் பகிா்ந்து வழங்கப்படும். ஊராட்சி செயலா்களை சுழற்சி முறையில் பணி மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.